யுடோபியா கிரகத்தில் சாதி (குட்டிக்கதை)..!

526


யுடோபியா கிரகத்தில் மக்கள் முப்பது வெவ்வேறு வண்ணங்களில் தோல் நிறங்கள் கொண்ட முப்பது சாதிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் தலைவரை தேர்ந்தெடுப்பது ஜனநாயக முறையில் நடந்தது.

சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் எட்டு கைகள் ஏழு கால்களுடன் ஆரியக் கடவுளைப் போல ஒரு அவலட்சணமான குழந்தை பிறக்குமென அவர்களின் மூதாதையர்கள் எழுதிவைத்திருந்ததால் அந்த பயத்தில் இயல்பாகவே வேறு சாதியைச் சேர்ந்த மனிதரின் மேல் இன்னொரு சாதி மனிதருக்கு காதல் வந்தாலும் மனதிற்குள்ளேயே வைத்து அடக்கிக்கொண்டார்கள்!



அங்கே வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. அழகான குழந்தைகள் பிறந்துகொண்டேயிருந்தன.

இப்படியான அந்த கிரகத்தில் வெவ்வேறு சாதியில் ஆண், பெண் என இரண்டு சேட்டைக்காரர்கள் பிறந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு கேள்விகள் மேல் தீராக்காதல். பதில்களின் மேல் கொள்ளைக் காமம். இரண்டையும் சேர்த்து ஆனந்தத்தில் திளைப்பதென்பது அவர்களின் இயற்கை புத்தி. பின் என்ன? இருவேறு சாதிகளைச் சேர்ந்த அவர்களுக்குள் காதல் வந்தது.



அந்த கிரகத்தின் எட்டு லட்ச ஆண்டுகள் வரலாற்றில் மனதிற்குள்ளேயே அழுத்தாமல் வெளிப்படுத்தப்பட்ட சாதி மறுப்பு காதல் அது! கிரகம் அல்லோலகல்லோலப்பட்டது! தலைவர்கள் திமிறினார்கள், கொதித்தார்கள், கொந்தளித்தார்கள். சாதியை மறுத்து உறவு கொள்வதென்பது கிரகத்தையே அழிக்கும் என தீர்க்கமாக வாதிட்டார்கள்.



காட்டுக்குள் ஓடிய அவர்கள் சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு மீண்டும் நாட்டுக்குள் வந்தார்கள். அவர்கள் கையில் மெல்லிய துணியால் போர்த்தப்பட்ட ஒரு பச்சிளங்குழந்தை இருந்தது. இரண்டு கைகள் இரண்டு கால்களுடன் தோற்றமளித்த அந்தக் குழந்தை தன் தந்தை தாயின் லட்சணங்களைத் தாங்கி அழகாக இருந்தது.


கிரகத்தாருக்கு அதிர்ச்சி! இத்தனை லட்சம் ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்துவிட்டோமே இயற்கையாய் ஊறிய காதலை மரபால் அடக்கி வாழ்ந்தோமே என்ற வெட்கத்திலும், இப்போதாவது நம் இனத்தில் இரு அறிவுடையவர்கள் பிறந்தார்களே என்ற மகிழ்ச்சியிலும் ஒரே நேரத்தில் அந்த கிரகம் இருவிதமான உணர்வுகளுடன் விழாக்காலம் பூண்டது.

எங்கும் வானவேடிக்கைகளும், விருந்துகளும் நடந்தன. அன்றோடு அந்த பைத்தியக்காரத்தனமான மரபு பிய்த்தெறியப்பட்டது. வழமையில் இருந்து மாறி புரட்சி செய்த அந்தக் காதலர்கள் உடோபியா கிரகத்தின் புரட்சியாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள்.


அந்த கிரகத்தில் இருந்து சரியாக ஒன்பது லட்சம் மைல் தொலைவில் பூமி என்ற கிரகம் இருந்தது. சாதி மாறி காதலித்ததற்காக ஒரு இளைஞனை சிலர் காட்டுக்குள் கூட்டிச் சென்று கற்றாழையை அவன் கழுத்தில் வைத்து அழுத்தினார்கள். முள் நிறைந்த அந்த கற்றாழை அவன் கழுத்தை அறுத்து நரம்புகளைக் கடந்து ரத்தத்தை ஆறுபோல் வெளியேற்றிக் கொண்டிருந்தது.

-டான் அசோக்-