
இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீது தாக்குதலில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் என அல்-கொய்தாவின் சிரியா பிரிவு மிரட்டல் விடுத்துள்ளது. ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
சிரியாவில் நடைபெறும் தாக்குதலில், அமெரிக்காவுடன் இணைந்து பஹ்ரைன், ஜோர்டான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் போர் விமானங்களும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது குண்டு வீசி வருகின்றன.
இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகள் மீது தனது விமானத் தாக்குதலை பிரித்தானியாவும் தொடங்கிய நிலையில் அல்-கொய்தாவின் சிரியா பிரிவான அல்-நுஸ்ராவின் செய்தித் தொடர்பாளர் அபு ஃபிராஸ் அல்-சுரி இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக பல்வேறு நாடுகளும் நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல், இஸ்லாம் மதத்துக்கு எதிரான போராகும்.
இந்தச் செயல் மூலம், அந்நாடுகள் உலகம் முழுவதிலுமுள்ள புனிதப் போராளிகளின் தாக்குதலுக்கு இலக்காகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் வன்முறைக்கு அஞ்சி, 1.6 லட்சம் அகதிகள் அண்டை நாடான துருக்கியில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





