இலங்கையில் தொடர்ந்து நீடிக்கப்படுகிறதா மின்தடை?

158

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள மின் தடை தொடருமான என்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு கட்டம் கட்டமாக ஒரு மணி நேர மின் விநியோகத் தடையை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் இந்த மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவ்வாறான சூழலில் இந்த மின் தடை தொடருமா என்பது தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பதிலிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நடைமுறையில் உள்ள ஒரு மணி நேர மின் விநியோகத் தடையைத் தொடர்ந்து நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பான கோரிக்கை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தினால் இதுவரை முன்வைக்கப்படவில்லை. எனினும், அவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.