இலங்கையில் அடுத்தடுத்து உயரும் எரிபொருள் விலை : அரசாங்க தரப்பிலிருந்து வெளியான காரணம்!!

109

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், நாட்டில் எரிபொருள் விலைகளையும் உயர்த்த வேண்டியுள்ளது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு எரிபொருள் இறக்குமதிக்கான அரசாங்கத்தின் செலவினம் சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (02) நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்றபோது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது எரிபொருள் விலைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட சில முன்மொழிவுகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்று கூறியுள்ளார்.

துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளினை அதே விலையில் நுகர்வோருக்கு எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தாலும், உலகில் எந்த நாட்டிலும் அத்தகைய அமைப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் விலை உயர்வை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், எரிபொருள் மானியமாக ரூ. 57 பில்லியன் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதியின் விலை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ள சூழலில், எரிபொருள் விலைகளை முழுமையாகக் குறைக்கவோ அல்லது மேலும் பெரிய நிவாரணங்களை வழங்கவோ அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், நமது நாட்டிலும் எரிபொருள் விலைகளை ஒப்பீட்டளவில் உயர்த்த வேண்டியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரச்சினை இன்னும் நீடிப்பதனால் எரிபொருள் விலைகளை முழுமையாகக் குறைக்கவோ அல்லது மேலும் பெரிய சலுகைகளை வழங்கவோ முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.