
இலங்கைக்கு சுற்றுலா வந்த இஸ்ரேலியப் பயணிகள் குழுவுடன் படகில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைச் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கடலுக்குள் பிடித்து தள்ளும் காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெளியான காணொளியின்படி, இலங்கைக்கு சுற்றுலா வந்த இஸ்ரேலியப் பயணிகள் குழுவுடன் படகில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைச் சுற்றுலா வழிகாட்டி ஒருவர், படகில் ஒரு பக்கமாக அமர்ந்து நீர் அருந்திக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராமல் ஒருவர் காணொளி எடுக்க, அவரை இஸ்ரேலியப் பயணி ஒருவர் கடலுக்குள் தள்ளி விடுகிறார். இதன்போது எடுக்கப்பட்ட காணொளி, சர்வதேச ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இஸ்ரேலிய ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான டேனியல் அம்ராம், குறித்த சுற்றுலாப் பயணிகளின் விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதற்கமைய, இது வெறும் நகைச்சுவைக்காகச் செய்யப்பட்ட செயல் என்றும், இலங்கையின் சுற்றுலா வழிகாட்டிக்கு இந்தக் குறும்பு முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும், அவர் காயமடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் இலங்கையின் சுற்றுலாத்துறையிலும் உள்ளூர் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





