வவுனியா ஓமந்தையில் படுகாயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

83

வவுனியா, ஓமந்தை – ஆறுமுகத்தான்குளம் பகுதியில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வந்த காட்டு யானை ஒன்று, தீவிர சிகிச்சைப் பலனின்றி இன்று (10.11.2026) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாகப் பலத்த காயங்களுடன் அவதிப்பட்டு வந்த குறித்த யானையைக் காப்பாற்றும் நோக்கில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கால்நடை வைத்திய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மருத்துவச் சிகிச்சைகளை வழங்கி வந்தனர்.

இருப்பினும், யானையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவக் குழுவினரின் தொடர் முயற்சிகளையும் மீறி சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.

யானையின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உடற்கூற்று பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக ஓமந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாகப் பிரதேச மக்கள் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் நெடுங்கேணி பெரியமடுப் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதிகளில் மனித-யானை மோதலைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.