அக்வான் புயலின் தாக்கம் : இலங்கையிலும் காற்றின் தரம் தொடர்பில் எச்சரிக்கை!!

22

வங்காள விரிகுடாவில் நிலவும் ‘அக்வான்’ (Akvan) புயல் காரணமாக, இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரம் பாதிக்கப்படுவதுடன், பனிமூட்டம் போன்ற மங்கலான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கையை நோக்கி வீசும் காற்றின் தாக்கம் காரணமாகவே கொழும்பில் வழக்கத்திற்கு மாறான மங்கலான வானிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வளிமண்டல நிலைமைகள் காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இந்த மங்கலான வானிலை அதிகமாகக் காணப்படலாம் எனவும், சில சந்தர்ப்பங்களில் பிற்பகல் வேளைகளிலும் இத்தகைய நிலைமை ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பனிமூட்டத்துடன் இந்த மங்கலான வானிலை காணப்படக்கூடும் என்பதால், வீதிகளில் பார்வைத் தெளிவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, நிலவும் வானிலை மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, கொழும்பில் வழக்கத்திற்கு மாறாகக் காணப்படும் மங்கலான வானிலை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.