உயிரிழந்து பலரை வாழ வைக்கும் 19 வயது இளைஞன்!!

21

கம்பஹா, வெயாங்கொட பிரதேசத்தில் வீதி விபத்தொன்றில் சிக்கி மூளைச் சாவடைந்த இளைஞன் ஒருவரின் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளை நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்வதற்கு நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

வெயாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் வீதி விபத்தொன்றில் சிக்கி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

எனினும் நோயாளியின் மூளைச் சாவடைந்துள்ளதனை தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் இவ்வாறு உடல் உறுப்புகள் பெறப்பட்டதாகவும் வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசேட மருத்துவக் குழுவொன்று மூளைச் சாவு அடைந்த நோயாளியின் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பெற்றுள்ளது. அதனை விமானப்படையின் உதவியுடன் வான் வழியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளியிடமிருந்து பெறப்பட்ட இதயம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 17 வயதுடைய இதய நோயாளி ஒருவருக்கு பொருத்துவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான நோயாளியின் உடல் உறுப்புகளை நேற்று மாலை வான் வழியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.