இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பிளட்சர் நீடிப்பார்?

434

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டி கிண்ணத்தை​ இந்தியா வென்றது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் அணியின் உற்சாகத்தை மட்டுமில்லாமல், அவர்களின் பயிற்சியாளர் டன்கன் பிளட்சரின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டின் உலகக் கிண்ண வெற்றிக்குப் பின்னர் பிளட்சர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றவுடன் தொடர்ந்த தோல்விகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டார். ஆயினும்,தற்போது அணியின் வெற்றிகள் இவரது பதவிக்காலத்தை நீட்டிக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஜிம்பாபாவேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிளட்சர் இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளிலும், உள்நாட்டில் விளையாடிய இங்கிலாந்து நாட்டுடனான போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது. பிளட்சருக்கு பதிலாக வேறு பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்ற யூகத்தின் நடுவே, அவுஸ்திரேலியாவுடனான உள்நாட்டுப் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது.

அப்போது, பிளட்சரின் பதவிக்காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. இப்போது சாம்பியன் கிண்ணத்தை பெற்ற வெற்றி, பிளட்சரின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிளட்சர் தனது பணியைத் திறம்பட செய்துவருவதாக இந்திய கிரிக்கெட் சங்கம் நேற்று பத்திரிகையாளர் செய்தியில் தெரிவித்துள்ளது. கேப்டன் டோனியும் இவரது செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வரும் செப்டெம்பரில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஓவர் உலகக் கிண்ண போட்டிக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே இருக்கும்போது புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை. பிளட்சரின் வித்தியாசமான அணுகுமுறை நல்ல பலனைத் தந்துள்ளது. அது இங்கிலாந்தின் சாம்பியன் போட்டியில் வெளிப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் போர்டு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல், பயிற்சியாளரும் அவரது உதவியாளர்களும் குறைந்த கால ஒப்பந்தத்தில் செயல்படுவதைவிட, குறைந்தது நான்கு வருட ஒப்பந்தத்தில் செயல்பட்டால் நல்லதொரு அணியை உருவாக்கமுடியும் என்ற எண்ணமும் குழுவின் அங்கத்தினர்களுக்குத் தோன்றியுள்ளது. தங்களது பணியின் நிரந்தரத் தன்மையினால் அவர்கள் திறமையுடன் செயல்படமுடியும் என்று கிரிக்கெட் போர்டு கருதுகின்றது. ஆயினும், பயிற்சிக் குழுவினர் அனைவரும் இதில் ஒத்துப்போனால் மட்டுமே இந்த எண்ணத்தை செயல்படுத்த முடியும்.