மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் – 19 பேர் பலி..!

463

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் கடந்த 2008ம் ஆண்டிலிருது ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையே இனமோதல்கள் தலைவிரித்தாடுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்ற பல்வேறு இனமோதல் சம்பவங்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்களில் 19 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

பாக்தாத்தின் கிரையத் பகுதியில் உள்ள ஹுசைனி அலி பாஷா மசூதியில் நேற்று மாலை நேர தொழுகை நடந்தபோது திடீரென்று உடலில் கட்டிய குண்டுகளுடன் தற்கொலைப்படை தீவிரவாதி உள்ளே நுழைந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குண்டை வெடிக்கச் செய்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 15 ஷியா முஸ்லிம்கள் உடல் சிதறி பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர்.

பாக்தாத்தில் இருந்து 95 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சமாரா அருகே ஷியா பிரிவினர் நடத்திய பேரணிக்குள் சீறிப் பாய்ந்த குண்டுகள் நிரப்பிய வாகனம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியாகினர் 8 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்றைய தாக்குதல்களில் மட்டும் பாக்தாத்தில் 19 பேர் பலியாகினர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிகை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.