விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் ஆன்டி முர்ரே..!

401

இங்கிலாந்தின் 77 ஆண்டு கால சாம்பியன்பட்ட ஏக்கத்தைப் போக்கி, விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார் ஆன்டி முர்ரே.

பலமான, அனுபவசாலியான செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தியே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முர்ரே, ஜோகோவிச்சை 6- 4, 7- 5, 6- 4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாதனை சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டன் நகரில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முதற்தர வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 2-ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவும் நேற்று மோதினர்.

உள்ளூர் இரசிகர்களின் பலத்த ஆதரவுடன் ஆடிய முர்ரேவின் ஆதிக்கம் படிப்படியாக தலைதூக்கியது. முதலாவது செட்டில், ஜோகோவிச்சின் 7-வது கேமை பிரேக் செய்து முதல் செட்டை தனதாக்கினார்.

முர்ரே.2-வது செட்டிலும் இதே யுத்தம் தொடர்ந்தது. இந்த செட்டில் ஜோகோவிச் நிறைய தவறுகளை இழைத்ததால், இந்த செட்டையும் முர்ரே வசப்படுத்தினார். இதையடுத்து 3-வது செட்டிலும் முர்ரே ஆதிக்கம் தொடர்ந்தது.

இதிலும் முர்ரே தனக்கே உரிய பாணியில் முத்திரை பதித்தார். மணிக்கு 131 மைல் வேகம் வரை சர்வீஸ் போட்ட முர்ரே, மொத்தம் 9 ஏஸ் சர்வீஸ்களும் போட்டுத் தாக்கினார்.

3வது செட்டில் இத்தனைக்கும் ஜோகோவிச் முர்ரேயின் சர்வீஸ் ஒன்றை முறியடித்து 4- 2 என்று முன்னிலை பெற்றிருந்தார். இருந்தபோதும் ஜோகோவிச் மேலும் தவறுகளைச் செய்து தன் சொந்த சர்வையே இழக்க சாம்பியன் பட்டமும் கைநழுவிப் போனது.

இறுதியில் முர்ரே வெற்றியை நெருங்கிய சமயத்தில், ஜோகோவிச் அவரது மூன்று சாம்பியன்ஷிப் பாயிண்டுகளை தடுத்தார். இதனால் 10-வது கேம் மட்டும் 10 நிமிடத்திற்கு மேலாக நகர்ந்தது. இறுதியில் ஜோகோவிச் பந்தை வலையில் அடித்து தவறு செய்ய, முர்ரே கழுத்தில் வெற்றிமாலை விழுந்தது.

இங்கிலாந்து வீரர் ஒருவர் விம்பிள்டன் பட்டத்தை வெல்வது 77 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடைசியாக 1936-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பிரெட் பெர்ரி விம்பிள்டனை வென்றிருந்தார்.

26 வயதான முர்ரேவுக்கு இது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஏற்கனவே 2012-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை கைப்பற்றி இருந்தார்.

2011-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச், இந்த ஆட்டத்தில் அளவுக்கு அதிகமான தவறுகளை செய்தார். குறிப்பாக பந்தை வெளியே அடித்து தானாக செய்யக்கூடிய தவறுகளை (அன் ஃபோர்ஸ்டு எரர்ஸ்) 40 முறை ஜோகோவிச் செய்தது தான், பெரும் பின்னடைவாகிப் போனது.