தென்பகுதி மீவர்களை வெளியேற்ற கோரி முல்லைத்தீவு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

404

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று  காலை 9 மணி தொடக்கம் மீனவர்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரி இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

தென் பகுதி மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி காரணமாக மாத்தளன் தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கரையோரப் பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன் பிடித்துச் செல்வது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையைத் தொடர்ந்து தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.