காணாமல் போன வவுனியா மாணவனை கண்டுபிடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..!

330


வவுனியாவில் கடந்த 26 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் மாணவன் ஒருவனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

பாடசாலை முடிவடைந்து சென்ற வவுனியா விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவனான சிவசூரியன் சனராஜ் (வயது 17) என்பவர் காணாமல் போயுள்ளார்.இம்மாணவனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியா விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் காணாமல் போனதாகக் கூறப்படும் இம்மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்த இம்மாணவன் பாடசாலையில் மாலை நேர வகுப்புகள் நிறைவடைந்த பின்னர் வீடு நோக்கிச் சென்றபோதே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இம்மாணவன் காணாமல் போனமை தொடர்பில் வவுனியா பொலிஸில் மாணவனின் பெற்றோரும் வவுனியா விபுலானந்தாக் கல்லூரி அதிபரும் முறைப்பாடு செய்திருந்தனர்.இருப்பினும் காணாமல் போனதாகக் கூறப்படும் இம்மாணவன் இதுவரையில் கண்டுபிடிக்காத நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் குறித்த மாணவன் காணாமல் போன விடயம் பற்றி கேட்டறிந்துகொண்டனர்.


இதேவேளை, ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும் காணாமல் போனதாகக் கூறப்படும் மாணவனை கண்டுபிடித்துத் தருவதாக உறுதியளித்தனர்.

vavuniya2


vavuniya1