இலங்கை தூதரை அழைத்து கண்டிக்குமாறு மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்..!

377

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:–

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் சென்று கைது செய்யப்பட்டுள்ள அராஜகம் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். தற்போது 21 மீனவர்களும் 19.7.2013 வரை இலங்கை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி சட்டவிரோதமாக கடத்தி கைது செய்வது பற்றி மீண்டும், மீண்டும் நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து கடிதம் எழுதி வருகிறேன். 5.6.2013 அன்று 10 படகுகளில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை கடத்திச் சென்றது உங்களுக்குத் தெரியும்.

அவர்களில் 24 மீனவர்கள் 2.7.2013 அன்று விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 25 மீனவர்கள் சுமார் ஒரு மாதம் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட பிறகு கடந்த 3.7.2013 அன்று விடுதலை ஆனார்கள்.

15.6.2013 அன்று இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற 8 மீனவர்கள் சட்டவிரோதமாக பிடித்து செல்லப்பட்டு, இன்னமும் இலங்கையில் உள்ள சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர இராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 29.11.2011 முதல் இலங்கை சிறையில் தவித்தப்படி உள்ளனர்.

கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்களை மீன் பிடிக்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை கடற்படையினர் அப்பாவியான, ஆயுதம் இல்லாத மீனவர்களை திட்டமிட்டு தாக்குகிறார்கள். இந்த கச்சத்தீவு பகுதியில்தான் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகிறார்கள் என்பதை எனது அரசு எப்போதும் வலியுறுத்தி கூறி வருகிறது.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்செயல்களை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமாகும். இது தமிழக மீனவர்களிடம் அதிருப்தியை அதிகரிக்க செய்து நிலைமையை மோசமாக்கி விடும்.

ஏற்கனவே நான் 17.6.2013 அன்று உங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி மத்திய வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, பேச்சுவார்த்தை உள்ளிட்ட எந்த முயற்சியையும் இந்திய அரசு எடுப்பதற்கான அறிகுறி இல்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கணக்கற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டிருப்பது, குறிப்பாக சமீபகாலங்களில் இந்த சம்பவம் அதிகரித்து இருப்பதால் உயர்மட்ட தூதரக அளவில் பேச்சு நடத்த வேண்டியது அவசியமாகும்.

எனவே டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்து சிறையில் அடைப்பதற்கும் கடுமையான கண்டனம் தெரிவித்து கண்டிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று இலங்கை தூதரிடம் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.