இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 17 தமிழர்கள் பிடிபட்டனர்..

439

kanchipuram

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 17 பேர் காஞ்சிபுர காவல்துறையினரிடம் பிடிபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் ஏராளமானோர் தமிழகத்திற்கு சென்று அங்கு அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் பலர் இலங்கைக்கோ, உறவினர்கள் உள்ள அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கோ அடிக்கடி தப்பிச் செல்வதும் காவல்துறை அவர்களை பிடிப்பதும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வரும் சம்பவங்கள்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடு பகுதியிலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேரை காவல்துறை பிடித்துள்ளது.பிடிபட்டவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

விசாரணையில் அவர்கள், திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி மற்றும் மதுரை மாவட்டம் ஆணையூர் திறந்தவெளி முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும், வாலாஜாபாத்தை சேர்ந்த ஜோதிராஜா என்ற ஏஜெண்ட் மூலம் இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

பிடிபட்ட இலங்கை தமிழர்களை அந்தந்த முகாம்களில் திரும்ப கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.