இந்தியா இலங்கையுடன் இறுதிப் போட்டியில்..!

409

cricket

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதி லீக் போட்டியில்81 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான,முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது.

இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்தியா அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்துனேயே நேற்றையதினம் களமிறங்கியிருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை,இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

தவான் 15 ஓட்டங்களுடனும், கோலி31 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 12ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணி 29 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது, சர்மா 48ஓட்டங்களுடனும், ரெய்னா4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இலங்கைக்கு 26 ஓவர்களுக்கு 178 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தரங்கா 6ஓட்டங்களுடனும், ஜெயவர்த்தன 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சங்கக்கார (0), சந்திமால் (26), மெத்யூஸ்(10) உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடனேயே மைதானத்தை விட்டு வெளியேற,இலங்கை அணி 24.4 ஓவர்களில் 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா,ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்படி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டிகளில் ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி சொந்த மண்ணிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.