ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

425

rail

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் ஜானக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு 12 மணியுடனேயே முடிவடைந் திருக்க வேண்டிய ரயில்வே வேலை நிறுத்தம் போக்குவரத்து துறையமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சுமுகமான பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இடைநடுவே கைவிடப் பட்டதாகவும் அவர் கூறினார்.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்ததையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் முதலாவது ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு முகாமையாளர் ரத்னநாயக்க கூறினார்.

பணிக்கு திரும்பும் ஊழியர்களின் எண்ணிக்கையினைப் பொருட்டே நேற்றைய தினம் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இருப்பினும் இன்று காலை முதலே அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்குத் திரும்புமென எதிர்பார்ப்பதாகவும் அவர் நேற்று கூறினார்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சின் அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலயங்களுக்கும் மேல் நடத்திய பேச்சுவார்த்தையினையடுத்து அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவு செய்யப்படுமென கூறியதனைத் தொடர்ந்தே தொழிற்சங்கங்கள் நேற்று இடைநடுவே தமது வேலை நிறுத்தத்தை கைவிட்டன.