ஓமந்தையில் தொடர்ந்தும் சாவடி இருக்கும் இனிமேல் சோதனை நடைபெறாது : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!

493

VV

இன நல்லுறவை கருத்தில் கொண்டு ஓமந்தை சோதனை நிலையத்தில் சோதனைகள் இடம்பெறாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். எனினும் சோதனைச் சாவடி அகற்றப்படாதெனவும் தேவையேற்பட்டால் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அது அகற்றப்படாதிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.  வடக்குக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், நேற்று சனிக்கிழமை(0702.2015) கொழும்பு திரும்ப முன்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்  ;  வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனையிலுள்ளனர். இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.  இதேவேளை கடந்த தேர்தலில் வடக்கில்  80 வீதமானவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.  அவர்கள் மாற்றம் வேண்டுமென்பதற்காக வாக்களித்தனர். எனவே மக்களின் எதிர்ப்பினை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அவதானத்துக்கு கொண்டு சென்று வட பகுதி பிரச்சினைகளை தீர்ப்பேன் எனவும் குறிப்பிட்டார்.  யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட இராஜாங்க அமைச்சர் நேற்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட பிரதான படைத் தலைமையகங்களின் உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.