வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் உபதலைவர் தனஞ்சயநாதன் தலைமையில் பிரத்தியேக இடமொன்றில் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர்கள், அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தில் பரவலாக நடைபெற்றுவரும் நியாயமற்ற நில ஒதுக்கீடுகள், காணி வழங்கல்கள், இன விகிதாசாரத்தை சீர்குலைக்கும் குடியேற்றங்கள், காடழிப்புகள், மண் அகழ்வுகள், முறையற்ற அரச வள ஆளணி உள்ளீர்ப்புகள் உள்ளிட்ட சமகால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, மாவட்டத்தின் நிலம் சார்ந்தும், மக்கள் நலன் சார்ந்தும் தீர்மானங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டன.
இதில் முக்கிய தீர்மானமாக மாவட்டத்தில் திட்டமிட்டு நடைபெற்றுவரும் இனங்களுக்கிடையில் முரண்நிலையை தோற்றுவிக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்பை கண்டிப்பதோடு, குறிப்பாக பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் காணிகளுக்கு காணி பத்திரம் வழங்காமல் கால இழுத்தடிப்புகளை செய்துவிட்டு, தற்போது வன இலாகாவுக்கு சொந்தமானது எனக்கூறி, அங்கிருந்து தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிக் கொண்டிருப்பதையும், சமகாலத்தில் பாரியளவில் காடுகள் அசூர வேகத்தில் அழிக்கப்பட்டு உடனடியாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு இனங்களுக்கிடையில் விரிசலையும், கசப்புணர்வையும் உண்டுபண்ணும் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதையும் கண்டித்து, இவை தொடர்பான தகவல்களை திரட்டி மாவட்ட அரச அதிபர் ஊடாக வரும் வாரமளவில் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 13.06.2013 அன்று கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த வவுனியா விபுலானந்தா கல்லூரியின் மாணவன் சிவசூரியகுமாரன் சரன்ராஜ்ஜை மீட்பது தொடர்பில் பெற்றோர் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பக்கபலமாக இருப்பதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய விசமிகளை வவுனியா பொலிஸார் உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும், கடத்தப்பட்ட மாணவனை உடனடியாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து, தம் பிள்ளைகள் தொடர்பில் ஒவ்வொரு பெற்றோரிடமும் ஏற்பட்டிருக்கும் கவலைகள் மற்றும் பயப்பீதியைப்போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமெனவும் வவுனியா மக்கள் சார்பாக பிரஜைகள் குழு வலியுறுத்துகிறது.