வவுனியாவில் பூவரசங்குளம் ஆரம்பப் பாடசாலையில் நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றம்! (படங்கள்)

369

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள பூவரசங்குளத்திலுள்ள பூவரசு ஆரம்பப் பாடசாலையில் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து முகாமிட்டு பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திவரும் விசேட அதிரடிப்படையினரை வெளியேற்றுமாறு புதிய அரசாங்கத்திடம் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விடையம் தொடர்பாக காவல்துறை, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சருக்கும், பாதுகாப்புச்செயலாளருக்கும் கடந்த 16.02.2015 அன்று கண்டித்தும் வலியுறுத்தியும் ஆனந்தன் எம்.பி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்  (19.02.2015) இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள மேற்படி பாடசாலைக்காணி, கட்டடங்களிலிருந்து விசேட அதிரடிப்படையினர் அதிரடியாக வெளியேறிச்சென்றுள்ளனர்.

சிறீலங்காவின் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலும் ஆனந்தன் எம்.பி, விசேட அதிரடிப்படையினரை வெளியேற்றி பூவரசு ஆரம்ப பாடசாலையின் கல்வி அபிவிருத்தி, வளஅபிவிருத்தி உட்பட பல்வேறு விடையங்களை செயல்படுத்துமாறு பாராளுமன்றத்திலும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார். கல்விச்சமுகமும், பூவரசங்குளம் மக்களும் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.

விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டமையால், மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ள பாடசாலையின் கல்வி சமுகத்தினர் இன்று காலை அங்கு சென்று, பாடசாலையின் அதிபர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர். ஆனந்தன் எம்.பியும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனந்தன் எம்.பி ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,

இதேபோன்று இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து அரச, தனியார் காணிகள் கட்டடங்களிலிருந்தும் இராணுவத்தினரை வெளியேற்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு புதிய அரசு வழியேற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விசேட அதிரடிப்படையினர் பாடசாலை காணி கட்டடங்களை விட்டு வெளியேறும் போது, அங்கிருந்த கட்டடங்களின் கூரை ஓடுகள், கூரைத்தகடுகள், தீராந்திகளை கழற்றி கொண்டு சென்றுள்ளதையும் காண முடிந்ததாகவும் ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.

DSC00205

DSC00209

DSC00210

DSC00211

DSC00212

DSC00213

DSC00215