‪‎கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்தில்‬ சுமார் 8,000 பக்தர்கள் பங்கேற்பு!(படங்கள்)

1036

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முதலாம் திகதி வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7689 பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு இம்முறை தமிழகத்திலிருந்து 112 வள்ளங்களில் 3945 பேரும் இலங்கையிலிருந்து 265 வள்ளங்களில் 3744 பேரும் வருகை தந்திருந்தனர். இம்முறையே அதிகூடிய பக்தர்கள் கலந்து கொண்டதாக இலங்கை கடற்படை மற்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியதுடன் மாலை சிலுவைப் பாதையும் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு திருப்பலி ஆராதனைகளின் பின் கொடி இறக்கமும் இடம்பெற்றது.

இலங்கை சார்பில் யாழ். குரு முதல்வர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் நெடுந்தீவு பங்குத் தந்தையும் இந்தியாவின் சார்பில் பாளையங்கோட்டை அருட்தந்தை ஜோ மிக்ஸ் மற்றும் இராமேஸ்வரம் பங்குத்தந்தை அருட் திரு சகாயராஜ் அடிகளாரும் திருப்பலி பூஜையை நடத்தினர்.

யாழ். மாவட்ட பேராயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையின் வழிகாட்டலில் இலங்கை கடற்படையினரின் பூரண ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வருடாந்தத் திருவிழாவில் கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன, வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சரத் திஸாநாயக்க, இந்திய துணைத் தூதுவர் வை.கே. நடராஜ், முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச கடல் எல்லையிலிருந்து 1.8 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தீவு அமைந்துள்ளதுடன் யாழ். மாவட்ட நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்படுகிறது.

தமிழகத்திலிருந்து வந்த பக்தர்கள் ஆலய வழிபாட்டிற்கு கடலில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்ததால் கடற்படையினரின் உயிர் காப்பு பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் சுமார் 8 ஆயிரம் அடியார்களின் பாதுகாப்புக்காக பெருந்தொகையான படையினரும் பொலிஸாரும் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

குடிநீர் வசதிகள், மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் புடைவை மற்றும் பல்பொருள் வியாபாரிகளும் வருகை தந்திருந்ததால் 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இராமேஸ்வரம், திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 130 ற்கும் அதிகமான அருட்சகோதரிகளும் அருட் தந்தையர்களும் இலங்கையிலிருந்து 30ற்கும் அதிகமானோரும் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, திருவிழாவில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த தமிழ்நாட்டு பெண் ஒருவரின் ஏழு பவுண் பெறுமதியான தாலிக்கொடி திருடப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. இது தொடர்பில் கச்சதீவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

11025154_625179674249983_4005795667914353804_n 11043060_625179610916656_3990152781271921590_n 11041801_625179380916679_8761888812359670433_n 11041778_625179570916660_6851131430489211761_n 11041745_625179447583339_2840834931685889077_n 11018810_625179407583343_4292816736423891813_n 11018184_625179617583322_7821110313709794994_n 11016840_625179530916664_4897467383321246297_n

 11009340_625179404250010_6190310347218445516_n 10926363_625179504250000_428610717637640338_n 10644889_625179507583333_397939210267920955_n 1454772_625179624249988_8497607187344903111_n