ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து..!

402

aussieஇங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 215 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராட் 48 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய அணி சார்பில் சிடில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய, அவுஸ்திரேலியா 280 ஓட்டங்களுக்கு தனது இன்னிங்சை முடித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் அகர் 98 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஆன்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

65 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள் எடுத்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியுள்ளது. ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்கள் குவித்துள்ளது. தலைவர் அலஸ்டயர் குக் 50 ஓட்டங்களும், கெவின் பீட்டர்சன் 64 ஓட்டங்களும் எடுத்தனர்.

அணிக்கு நம்பிக்கையூட்டிய இயான் பெல் 95 ஓட்டங்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 47 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். டெஸ்டில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த பெல், இந்த மைல்கல்லை கடந்த 14-வது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இங்கிலாந்து அணி இதுவரை 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.