வவுனியாவில் இடம்பெற்ற அமிர்தலிங்ம் சிரார்த்ததினம்..!

1091

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் சிறந்த அரசியல்வாதிகளை இழந்ததனால் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றோம் என முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமுன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அ.அமிர்தலிங்கத்தின் சிரார்த்ததினம் இன்று புளொட் அமைப்பினால் நினைவு கூறப்பட்டபோது அங்கு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

யுத்தமில்லாத பிரதேசத்திலே நாளுக்குநாள் அரசானது தமது படையை பலப்படுத்துவதற்காக கோடி கோடியான பணத்தை செலவிடுகிறது.



ஆனால் எங்களுடைய தேசிய இன விடுதலை போராட்டத்திலே மரணித்த அல்லது வாழ்விழந்த எத்தனையோ போராளிகள் மற்றும் குடும்பங்கள் இன்று சொந்த வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாதுள்ளனர்.

எனவே அரசாங்கமானது அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் சிறந்த புனர்வாழ்வை அளிப்பதற்கு முன்வரவேண்டும். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும், வள்ளியம்மைக்கும் மகனாக 1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந் திகதி பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார்.

பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951-ல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார். சட்டத்துரையை கைவிட்டு தந்தைச் செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துக் கொண்டார். 1952-ம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1956-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார். இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்றார்.

தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972-ம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார்.

தந்தைச் செல்வ நாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார். 1977-ம் ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவியை வகித்த ஒரே தமிழர் அமிர்தலிங்கம் ஆவார். 1970 முதல் 1980 வரை, அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப்போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின.

இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.

இதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. 1989 ஜுலை 13-ம் நாள் கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார்.

vavuniya1

vavuniya2 vavuniya3 vavuniya4
vavuniya5