வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கி இன்று (29.04) புதன்கிழமை நெடுங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்..
கூட்டுறவு அமைப்புகள் பல சாதனைகளை நிகழ்த்திய காலம் ஒன்றிருந்தது. ஆனால், இன்று கூட்டுறவுத்துறை நலிவடைந்திருப்பதோடு, கூட்டுறவு அமைப்புகளுக்கும் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகிறது.
கூட்டுறவுத்துறையின் இந்தச் சரிவுக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் இளையோர் பற்றாக்குறையும் ஒன்று இளையோரை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டால் கூட்டுறவுத்துறைக்குப் புதுவேகம் பிறக்கும்.
கூட்டுறவு அமைப்புகளின் தலைமைப் பதவிகளிலும், நெறியாளர் குழுவிலும் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே பணியாற்றுகின்றனர். கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்கு இவர்களின் அனுபவ அறிவு அவசியம்.
அதேசமயம் கூட்டுறவுத்துறைக்குப் புது இரத்தம் பாய்ச்சுவதற்கு இளையோரைக் கணிசமான அளவில் இணைத்துக் கொள்ளுவதும் அவசியம் ஆகும்.
இளையோரும் கூட்டுறவின் மீது நாட்டம் கொள்ளத்தக்க வகையில் கூட்டுறவுக் கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். கூட்டுறவுத்துறையில் நாம் பாரம்பரிய அணுகுமுறைகளையே இப்போதும் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால், தனியார்துறை இப்போது பலம் மிக்க துறையாக உருவெடுத்துள்ளது.
திறந்த பொருளாதாரக்கொள்கையால் நமது உள்ளூர்த்தரம் சர்வதேசத் தரத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொள்ளத்தக்க வகையில் கூட்டுறவுத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தினால், கூட்டுறவு மீண்டும் மிடுக்கோடு நிமிரும் காலம் விரைவில் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன்,வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கு.ரவீந்திரநாதன் ஆகியோருடன் வங்கி நடவடிக்கைகளில்பங்கேற்க வந்த பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.











