தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் அவுஸ்திரேலியா..!

359

ashesஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க அவுஸ்திரேலிய அணி போராடி வருகிறது.

இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 215 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா 64.5 ஓவர்களில் 280 ஓட்டங்களை மட்டுமேபெற்றது.

முதல் இன்னிங்ஸில் 65 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 3-வது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 133 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இயான் பெல் 95, ஸ்டூவர்ட் பிராட் 47 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில் 4-வது நாளான நேற்று (சனிக்கிழமை) தொடர்ந்து ஆடிய அந்த அணியில், இயான் பெல் 237 பந்துகளில் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் பெல் அடித்த 18-வது சதமாகும்.

ஸ்டூவர்ட் பிராட் 65 ஓட்டங்களுடன்ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இயான் பெல்லும் (109)  ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கிரீம் ஸ்வான் 9 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் ஓட்டங்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் 375 ஓட்டங்களில் முடிவுக்கு வந்தது.

அவுஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் பட்டின்சன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பிறகு 311 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணிக்கு வாட்சன்-கிறிஸ் ரோஜர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 24.1 ஓவர்களில் 84 ஓட்டங்களை சேர்த்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.

வாட்சன் 74 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களை எடுத்தார். இதையடுத்து எட் கோவன் களம்புகுந்தார். மறுமுனையில் கிறிஸ் ரோஜர்ஸ், டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

மறுமுனையில் 43 பந்துகளைச் சந்தித்த கோவன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி 124 ஓட்டங்களை எட்டியபோது கிறிஸ் ரோஜர்ஸ் 52 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதன்பிறகு வந்த தலைவர் கிளார்க் 23 ஓட்டங்களிலும், ஸ்மித் 17 ஓட்டங்களிலும், பில் ஹியூஸ் ஓட்டங்கள் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

இதன்படி 4-வது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 71 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களை எடுத்துள்ளது. பிராட் ஹாடின் (11), ஆஷ்டன் அகர் (1) களத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் ஆஸி. அணி வெற்றிபெற வேண்டுமாயின் 4 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க இன்னும் 137 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இன்றைய ஐந்தாவதும் இறுதியுமான ஆட்டத்தை தொடரவுள்ளது.