வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்களின் போராட்டம்!!

738

Bus

இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை கண்டித்து வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் ஏ. டபிள்யூ.ரசீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் தனியார் பேரூந்துகளுக்கும், இலங்கை போக்குவரத்து சபைக்குமென முரண்பாடு ஏற்படாத வகையில் நேர அட்டவணை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அதிகளவான பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேர அட்டவணையை அலட்சியம் செய்து போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

ஏனைய மாகாணங்களில் இருந்து வரும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளை வவுனியா சாலையில் தரித்து பயணிகளை ஏற்ற அனுமதிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தனியார் பேரூந்துகள் நட்டத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உட்பட மத்திய மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை வவுனியாவில் அமைக்கப்படும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்பதனையும் வலியுறுத்தி எதிர்வரும் 11 ஆம் திகதி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைக்கு அமைவாக குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ச்சியான பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் ஏ. டபிள்யூ.ரசீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.