நிலநடுக்கத்தில் பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு!!

654

Earth

கடந்த மாதம் 25ம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு இதுவரை 7,276 பேர் பலியாகி உள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சிந்துபால்சவுக் மாவட்டத்தில் அதிக பட்சமாக 2,829 பேரும், காட்மாண்டு மாவட்டத்தில் 1,202 பேரும் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 90 ஆயிரத்து 664 வீடுகள் அடியோடு இடிந்தன.

கடந்த வாரம் பனிச்சரிவில் சிக்கி பலியான மலையேற்ற வீரர்கள் 100 பேரின் உடல்களை லாங்டாங் என்ற கிராமத்தில் நேபாள போலீசார் நேற்று முன்தினம் மீட்டனர். இந்த உடல்கள் அனைத்தும் 6 அடி ஆழ பனிக்கட்டிகளுக்குள் புதைந்து கிடந்தன.

இந்த நிலையில் நேபாளத்தில் பலியான வெளிநாட்டவர்கள் 57 பேரில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல் 10 இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மீட்பு பணியின்போது இந்திய ஹெலிகப்டர்கள், கோர்கா மாவட்டத்தில் உள்ள னாங் கோம்பா என்ற கிராமத்தில் இருந்து 22 புத்த துறவிகளை பத்திரமாக மீட்டன. இந்தியாவின் பிரபல இளம் மலையேற்ற வீரரான அர்ஜூன் வாய்பாய், மகாலு மலையடிவார முகாம் பகுதியில் இருந்து நேபாள ராணுவ குழுவினரால் மீட்கப்பட்டார்.

நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கடந்த 9 நாட்களாக 34 நாடுகளை சேர்ந்த 4,050 நிபுணர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணி பெருமளவில் முடிந்து விட்ட நிலையில் இவர்கள் அனைவரையும் தங்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்ப நேபாள அரசு முடிவு செய்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 6.45 மணி அளவில் நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 4.6 ஆக இருந்தது. இந்த நில நடுக்கம் மக்களால் உணரப்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது.