பாலியல் அடிமைகளாக கடத்தப்பட்ட பெண்கள், சிறுமிகள் : 214 பேர் கர்ப்பம்!!

318

Kidnap

ஆபிரிக்க நாடான நைஜிரீயாவில் போகோஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

2002ம் ஆண்டு தொடங்கபட்ட போகோஹரம் தீவிரவாத அமைப்பு மேற்கத்திய கல்விக்கு எதிராகவும், மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்திற்கு எதிராகவும் போர் தொடுத்து வருகிறது. பெண்கள் படிக்கக் கூடாது என்று இது தடை விதித்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் 13,000 பேரை இந்தத் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். ஆண்களைக் கொல்லும் இவர்கள் பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்த போகோஹரம் தீவிரவாதிகள், தங்களது பெயரையும் இஸ்லாமிய மேற்கு ஆபிரிக்க மாகாண குடியரசு என்று மாற்றிக் கொண்டனர். கடந்த 2014ம் ஆண்டு சிபோக் என்ற கிராமத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகளை இவர்கள் கடத்திச் சென்றது உலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 700 பெண்களை தீவிரவாதிகளிடமிருந்து இராணுவம் மீட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் நைஜீரிய இராணுவம் 234 பெண்களையும், சிறுமிகளையும் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டது.

சம்பிசா வனப்பகுதியில் இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 214 பேர்தான் தற்போது கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களை பாலியல் அடிமைகளாக தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ள தகவல் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ நா. உணவுத் திட்ட நைஜீரிய செயல் இயக்குநர் பாபாடுன்டே ஓஷோடிமெஹின் லாகோஸில் கூறியதாவது:-

ஏற்கனவே இப்பெண்களுக்கு எச்ஐவி, எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவர்களில் 214 பேர் கர்ப்பிணிகளாக உள்ளனர். சிலருக்கு கரு நல்ல வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. சிலர் தற்போதுதான் கர்ப்பமுற்றுள்ளனர்.

அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, சில பச்சிளம் குழந்தைகளும் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த குழந்தைகள் வனப்பகுதியில் பிறந்தவர்கள் ஆவர். இப்போதுதான் அவர்கள் வெளி உலகையே பார்க்கிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.