ஆஷஸ்: 14 ஓட்டங்களால் ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து..!

355
endlandஅவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இங்கிலாந்தின் டிரென்ட்பிரிட்ஜில் கடந்த 10-ம் திகதி ஆரம்பமான, இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

சிடிலின் அபாரமான பந்து வீச்சால் தடுமாறிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

இறுதியாக இங்கிலாந்து 215 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

இங்கிலாந்து சார்பில் சற்று நிதானமாக ஆடிய டிராட், அதிகபட்சமாக 48 ஓட்டங்களை எடுத்தார்.

சிறப்பாக பந்து வீசிய ஆஸி. வீரர் சிடில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸி. வீரர்களை பதம் பார்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள், அந்த அணியை 280 ஓட்டங்களுக்குள் மடக்கினர்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் அகர் 98 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர் ஆன்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

65 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 375 ஓட்டங்களை குவித்தது. பெல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன்படி இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை விட 310 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இதனால் 311 ஓட்டங்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களம் இறங்கியது.

இந்த போட்டியின் நேற்றைய 5-வது மற்றும் இறுதியுமான ஆட்டம் தொடங்கிய போது, 4 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க அவுஸ்ரேலியா வெற்றி பெற வேண்டுமாயின் 137 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அகர் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து வந்த ஸ்டார்க் 1 ஓட்டத்துடனும், சிடில் 11 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

அப்போது, அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்களை எடுத்திருந்தது.

10-வது விக்கெட்டுக்கு ஹடின் உடன் பேட்டின்சன் ஜோடி சேர்ந்தார். அப்போது அவுஸ்திரேலியா அணிக்கு 80 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ஹடின் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அத்துடன் அணியை வெற்றிநோக்கி அழைத்து சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பேட்டின்சன் உறுதுணையாக இருந்தார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை அவுஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை எடுத்திருந்தது. வெற்றிக்கு 20 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

பின்னர் போட்டி தொடங்கிய போது, ஹடின் 71 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி வரை நின்ற அவரால் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை.

இதனால் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் அன்டர்சன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்தின் ஆன்டர்சன் தெரிவு செய்யப்பட்டார்.