பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது : விவேகானந்தர்!!

447

Vivekananda

“என் சோகம் சொல்லி மாளாது” – என்று சொல்வது ஆன்மிகம் ஆகாது. அது வெறும் காட்டுமிராண்டித்தனம். ஒவ்வொருவருக்கும் சுமக்க அவர்களது சொந்தச் சுமை உள்ளது. நீங்கள் சோகமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். உங்கள் துக்கத்தை வெற்றி கொள்ள முயலுங்கள்.

பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது. ஒருபோதும் பலவீனர்களாக இருக்காதீர்கள். வலிமை படைத்தவர்களாக இருக்க வேண்டும். உங்களுள் அளவற்ற பலம் இருக்கின்றது. இல்லாவிடில் எப்படி எதனையும் வெற்றிகொள்ள முடியும், எப்படிக் கடவுளை நெருங்க முடியும்..

அதேசமயம் அளவுக்கு மீறிய களிப்பையும் தவிர்க்க வேண்டும். மிதமிஞ்சிய அந்த நிலையில் இருக்கும் மனதில் அமைதி தோன்ற முடியாது. அது சஞ்சல நிலையிலேயே இருக்கும். மிதமிஞ்சிய களிப்பை எப்போதும் தொடர்ந்துவருவது துன்பம். கண்ணீர்த் துளிகளும் சிரிப்பொலியும் மாறிமாறி வருபவை.

மக்கள் பெரும்பாலும் மனத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு ஓடுகின்றனர். மனம் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் விளங்கட்டும்.

அதேவேளையில், அமைதியாக இருக்கட்டும். மிதமிஞ்சிய நிலையில் களிக்கும்படி ஒருபோதும் மனத்தை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு மிதமிஞ்சிய நிலைக்கும் ஓர் எதிர் நிலை உண்டு.