வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் வீசா அனுமதி வழங்குமாறு பிரிட்டன் கோரிக்கை..!

966

britanஇலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்ல பொதுநலவாய செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலருக்கு இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி வழங்காது என்று கவலைகள் எழுப்பப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே, பிரிட்டனின் துணை வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

´சில ஊடகவியலாளர்கள் இலங்கை செல்வதற்கு வீசா கிடைக்காது என்பது போலத் தெரிவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். பொதுநலவாய செயலகத்தின் அனுமதியைப் பெறுகின்ற எல்லா ஊடகவியலாளர்களும் மாநாட்டுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் அங்கிருக்கும்போது இலங்கையில் சுதந்திரமாக பயணிக்கக் கூடுமாக இருக்க வேண்டும் என்றும் ஐக்கிய இராச்சியம் அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறது´ என்றார் பிரிட்டனின் துணை வெளியுறவு அமைச்சர்.

´ஊடகவியலாளர்களுக்கு பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்வதற்கான அனுமதி கிடைத்துவிட்டால் அவர்களுக்கு வேண்டும் என்று அனுமதி கொடுத்தால் அவர்களுக்கு மாநாட்டை நடத்தும் நாடு வீசா வழங்குவது என்பது தானாக நடக்கவேண்டிய ஏற்பாடு. இதில் முடிவுகளை எடுக்க வேண்டியது காமன்வெல்த் செயலகம் தான்´ என்றும் அலிஸ்டர் பர்ட் கூறினார்.

இதற்கிடையே, சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி என்பது முன்னைய பொதுநலவாய மாநாடுகளின்போது கடைப்பிடிக்கப்பட்ட பொதுநலவாய செயலகத்தின் ஒழுங்குவிதிகளின் படியே நடக்கும் என்று இலங்கை அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.

மாநாட்டை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், பொதுநலவாய செயலகத்தின் அனுமதியைப் பெற்ற சர்வதேச ஊடகவியலாளர்களின் வீசா விண்ணப்பங்களை பரிசீலிப்பது இலங்கை அரசின் பொறுப்பு என்று பொதுநலவாய மாநாட்டின் ஊடக விவகாரங்களுக்குப் பொறுப்பான இலங்கை அதிகாரி சரித்த ஹேரத் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(BBC)