ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழு இலங்கை வருகை..!

513

euஒருவார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தூதுக்குழுவொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய காரியாலயம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவின் தலைவரான ஜீன் லம்பேர்ட் தலைமையிலான மேற்படி தூதுக்குழுவினர் தங்களின் ஒருவார கால விஜயத்தின்போது வட புலத்திற்கு பயணிக்கவுள்ளதுடன் அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஏனைய குழுக்களின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பரில் வட மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டே அவர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

மேற்படி தேர்தலுக்கான ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை வரவழைப்பது குறித்து அரசாங்கம் இன்னமும் அறிவிக்காத நிலையில் இலங்கையில் நடைபெற்றிருந்த இறுதிக்கால கட்ட யுத்தம் குறித்து தேசிய மட்டத்திலான விசாரணைக்கு மேலாக சுயாதீனமான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட முற்பகுதியில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊடகவிலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் பற்றிய முறைப்பாடுகளையிட்டு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் விசனமடைந்துள்ளதுடன் அவற்றுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அது ஊக்கப்படுத்துவதாகவும் ஜீன் லம்பேர்ட் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.



அத்துடன் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் இலங்கையில் பொறுப்புக் கூறும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தேவைப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தும் வகையில் ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானமொன்றையும் நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.