
ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவள்ளி தம்பதிக்கு 24 பெப்ரவரி 1948ம் திகதி பிறந்தார்.
பெங்களூர் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். பின்னர் சென்னை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், கல்வியை கைவிட்டு 1965-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
* 127 திரைப்படங்களில் தன் திறமையை வெளிப்படுத்திய ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி திரை நட்சத்திரமாக பல ஆண்டுகள் ஜொலித்தார்.
* 1981-ம் ஆண்டு அதிமுக-வில் இணைந்து பணியாற்றினார்.
* 1983-ம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.
* 1983ம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெற்ற திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜெயலலிதா மேற்கொண்ட பிரச்சாரம் அக்கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
* சத்துணவு திட்டத்திற்கான உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்த ஜெயலலிதா 1984-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
* 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைவுக்கும் தேர்தல் நடைபெற்றது.
* இந்த தேர்தலில் ஜெயலலிதா தமிழகமெங்கும் மேற்கொண்ட சூறாவளி சுற்றுபயணமும் எம்.ஜி.ஆரை மீண்டும் முதல்வராக்குவோம் என்கிற சூளுரையும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
* அந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து எம்.ஜி.ஆர் மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
* எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 -வது ஆண்டு அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளராக பதவியேற்றார்.
* எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தது.
* இந்த சூழ்நிலையில் 1989 ஜனவரியில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி தனித்துப் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை பெற்றது.
* அந்த தேர்தலில் அவர் போடி நாயக்கனூர் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1989ம் ஆண்டு பெப்ரவரியில், அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1989 -ம் ஆண்டு அதிமுகவிற்கு மீண்டும் இரட்டை இலை சின்னத்தை அவர் மீட்டுக் கொடுத்தார்.
* 1989 -ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டிலும், புதுவையிலும் அதிமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஜெயலலிதா அரசியல் வாழ்வில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
* அதன் பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மருங்காபுரி, மதுரை கிழக்கு, பெரணமல்லூர் சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
* 1991 -ம் ஆண்டு ராஜீவ் காந்தி மரணமடைந்த சூழ்நிலையில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்று மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 225 தொகுதிகளைக் கைப்பற்றியது.
* ஜெயலலிதா தலைமையிலான அதிமுக முதல் முறையாக இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.
* தான் போட்டியிட்ட பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று 1991-ம் ஆண்டு ஜூன் 24-ம் திகதி தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றார்.
* ஊழல் குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கும் மக்களைவாக்கும் சேர்த்து நடைபெற்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.
* ஒரு மக்களவைத் தொகுதியில் கூட வெற்றிபெறாத அதிமுக 4 சட்டப்பேரவை தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
* தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வி அடைந்தார். ஜெயலலிதா வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியைத் தேடித் தந்த தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தது.
* தோல்வியால் துவண்டுவிடாத ஜெயலலிதா சவால்களை சமாளித்து இரண்டே ஆண்டுகளில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை 30 இடங்களில் வெற்றிபெறச் செய்தார். அதிமுக 18 இடங்களில் வெற்றி பெற்றது.
* ஒரே ஆண்டில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்த அதிமுக 10 இடங்களில் வெற்றி வெற்றது.
* 2001-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது.
* 2001-ம் ஆண்டு மே மாதம் 14-ம் திகதி இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
* டான்சி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதல்வர் பதவியிலிருந்து 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இராஜிநாமா செய்தார்.
* டான்சி ஊழல் வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் 2002-ம் ஆண்டும் மார்ச் 2-ம் திகதி தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார்.
* 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. இந்த தேர்தலில் அந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.
* 2006-ம் ஆண்டு தேர்தலில் மதிமுக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 69 இடங்களே கிடைத்தது. திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றது.
* 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்வியே காத்திருந்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் 12 இடங்களையும் திமுக கூட்டணி 27 இடங்களையும் கைப்பற்றியது.
* மூன்று தொடர் தோல்விகளால் துவண்டுவிடாமல் அதிமுகவிற்கு புத்துணர்வூட்டி தோல்விப் பாதையிலிருந்து மீட்டெடுத்து 2011-ம் ஆண்டு அக்கட்சிக்கு மிகப்பெரும் வெற்றியைத் தேடித் தந்தார். அந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தல் களம் கண்டது. அந்த கூட்டணிக்கு 203 இடங்கள் கிடைத்தது. அதிமுக மட்டும் 150 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
* 2011-ம் ஆண்டு மே மாதம் 16-ம் திகதி தமிழகத்தின் முதல்வராக 4வது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்றுக்கொண்டார்.
* சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ம் ஆண்டு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் இரத்தானது.
* இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டில் ஜெயலலிதா நிரபராதி என கடந்த 11-ம் திகதி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
* இதையடுத்து முதல்வராக பதவி வகிக்க ஜெயலலிதாவிற்கு இருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, இன்று 2015 (மே 23) தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா அரியணை ஏறியுள்ளார்.




