60 வயதில் குழந்தை பெற்று சாதனை படைத்த பெண்மணி!!

333

baby at 60 years

குஜராத்தில் பெண்மணி ஒருவர் 60 வயதில் நவீன மருத்துவ முறை மூலம் குழந்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை சேர்ந்த ரஞ்சோட் படேலுக்கும், பன்ஜி என்பவருக்கும் 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமாகி நீண்ட நாட்களாகியும் ரஞ்சோட் – பன்ஜி தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை.

இதையடுத்து குஜராத்தில் உள்ள பல பிரபல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்று எந்த பலனும் இல்லை. பின்னர் மும்பை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை.
மருத்துவத்தில் நம்பிக்கை இழந்த தம்பதியினர் ஆன்மிகத்தை நாடினர்.

குஜராத்திலும், மராட்டியத்திலும் அவர்கள் கால்படாத கோவிலே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருவரும் குழந்தை வேண்டி கோவில், கோவிலாக ஏறி இறங்கினார்கள். தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியதால் ரஞ்சோட் நம்பிக்கையை இழந்து விட்டார்.

ஆனால் 60 வயது ஆன பிறகும் பன்ஜி மட்டும் நம்பிக்கை இழக்காமல் நவீன மருத்துவ முறையையும் பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். ஆமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் மெகுல் தமனியை பன்ஜி நாடினார்.

பன்ஜியை பரிசோதித்த அவர் கடந்த ஆண்டு சிகிச்சையைத் தொடங்கி (IVF) In vitro fertilisation முறை மூலம் குழந்தை பெற வைக்க ஏற்பாடு செய்தார்.

இதற்காக 65 வயதாகும் பன்ஜியின் கணவர் ரஞ்சோட் படேலிடம் இருந்து உயிரணுக்கள் பெறப்பட்டு அவை கருவாக வளர்க்கப்பட்டு பன்ஜி உடலுக்குள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்ததால், கடந்த 9 மாதங்களாக தன் குழந்தையை பன்ஜி வயிற்றில் சுமந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு சுமார் 4 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேலும், அந்த குழந்தையை பார்த்த பன்ஜி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.