
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா ஏஞ்சல்ஸ் டுரன் (54) என்ற பெண்மணி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனின் ஒரு பகுதி தமக்கு சொந்தமானது என உரிமை கோரி, ஸ்பெயின் நோட்டரி அலுவலகத்தில் பதிவு செய்தார்.
பின்னர் நகரின் பிரதான இடம் ஒன்றில், அலுவலகம் ஒன்றையும் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், குறிப்பாக சோலார் பனல் மூலம் சூரிய சக்தியைப் பயன்படுத்துவோர் தமக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மிரட்டலையும் விடுத்துள்ளார்.
மேலும் பிரபல ஒன்லைன் வணிக நிறுவனமான இபே நிறுவனம் மூலம், இணையதளம் வழியாக சூரியனின் பகுதியை ஒரு சதுர மீட்டருக்கு ஒரு யூரோ (ரூ.71.30) என்று கட்டணம் நிர்ணயித்து விளம்பரம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக எழுந்த விமர்சனங்களையடுத்து இபே நிறுவனம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மரியா டுரன் கணக்கைத் தடை செய்தது.
இதனையடுத்து மரியா, ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சோலார் பனல் மூலம் தமக்கு சொந்தமான சூரியனின் பகுதியை பயன்படுத்திய வகையில் தமக்கு 7,500 பவுண்டுகள் கட்டண நிலுவை வரவேண்டியது உள்ளதாகவும், ஆனால் இதுவரை தனக்கு அந்த கட்டணம் வந்து சேரவில்லை என்றும் கூறியுள்ளார்.
அவரின் வழக்கை நீதிமன்றம் தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனிடையே இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொள்ளலாம் என இபே நிறுவனம் முன்வந்ததையும் மரியா நிராகரித்துவிட்டார்.
மேலும், நட்சத்திரத்தையோ அல்லது வேறு எந்த ஒரு கிரகத்தையோ எந்த ஒரு நாடும் உரிமை கொண்டாடக்கூடாது என சர்வதேச ஒப்பந்தம் உள்ளது இருந்த போதிலும், தாம் தனிநபர் என்பதால் தம்மை அந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.




