கவிஞர் வாலி இன்று மாலை காலமானார்..!

377

TH-VAALIசினிமா பாடலாசிரியர் வாலி (வயது 82) உடல நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலி, கடந்த மாதம்  உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டது. பின்னர் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது.

அவருக்கு வைத்தியர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார். அவரது மறைவிற்கு ஏராளமான திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாலி 1931-2013 (வரலாறு)

தமிழில் ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, புதிய வானம் புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன், வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மண்ணிக்க வேண்டுகிறேன், அவளா சொன்னால் இருக்காது என எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்து இக்கால நடிகர்கள் படங்கள் வரை ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எழுதிய உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.