
இதயம் வரை பென்சில் துளைத்த நிலையில், 18 மணி நேரம் உயிருக்கு போராடிய சிறுவனுக்கு, பிறந்த நாள் பரிசாக, வைத்தியர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், வாரங்கல்லுக்கு அருகில் உள்ள, நர்சம்பேட்டையில் வசிக்கும் சரண், என்னும் 6 வயது சிறுவன், அப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், முதலாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், கடந்த வெள்ளிக்கிழமை, தன் சட்டைப்பையில் 19 செ.மீ. நீளமுள்ள, கூர்மையான பென்சிலை வைத்துக்கொண்டு, விளையாடியுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், பென்சில், அவரது மார்புக்கூட்டை துளைத்துக்கொண்டு, 7 சென்றிமீற்றர் வரை உள்ளே சென்றுள்ளது.
ஒரு சென்றிமீற்றர் அதிகமாக துளைத்திருந்தாலும், அவரது இதயம் ஓட்டையாகி உயிருக்கு ஆபத்தாகி இருக்கும். உடனே, அருகில் உள்ள மருத்துவமனையில் சரண் அனுமதிக்கப்பட்டார்.
அவனை பரிசோதித்த வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து பென்சிலை அகற்ற முடிவு செய்து, அடுத்த நாள் (கடந்த 11ம் திகதி), சரணின் மார்பை துளைத்த பென்சிலை அகற்றினர்.
அன்றைய தினம் அவனுடைய பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.





