கொலை செய்த மனைவியின் சடலத்துடன் 3 நாட்களாக இருந்த கணவர் கைது!!

537

arrests

திருநெல்வேலி அருகே மனைவியை கொலை செய்து விட்டு சடலத்துடன் 3 நாட்கள் இருந்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பத்தமடை குண்டலகேசி தெருவைச் சேர்ந்த ஆயிரத்தான், கட்டிட தொழிலாளியாக பணிசெய்து வந்தார். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு நபர்ணா என்ற மகளும், தருண்ராஜா என்ற மகனும் உள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டாக ஆயிரத்தான் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.
எனவே முத்துமாரி தான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 12ம் திகதி கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஆயிரத்தான் மனைவியின் தலையை பிடித்து சுவற்றில் மோதியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் முத்துமாரியின் உடலை கட்டிலில் போட்டு விட்டு கடந்த 3 நாட்களாக குழந்தைகளுடன் எதுவும் நடக்காதது போல் ஆயிரத்தான் இருந்துள்ளார்.

இந்நிலையில், முத்துமாரி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது குழந்தைகளிடம் விசாரித்த போது அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதால் பக்கத்து வீட்டினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் அழுகிய நிலையில் கிடந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கணவர் ஆயிரத்தானை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.