ஆடிப்பிறப்பு : மறக்கப்படும் ஈழத்தமிழ் பண்டிகை!!

1029

AAdip pirappu

பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ். சர்க்கரையின் தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள். குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள் மிதக்கும் தேங்காய் துண்டுகளின் ருசிக்காக.

ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.) தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள் இந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது.

அதுவும், கோடை காலம் நிறைவடைந்து மாரி காலத்துக்குள் மக்கள் செல்வதைக் குறிப்பதாக ஆடிப்பிறப்பை தமிழ் மூத்தோர் கூறுகின்றனர்.

பனங்கட்டி, கருப்பணி மற்றும் தேங்காய் என்று வடக்கு- கிழக்கில் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கும் உணவு வகைகள் ஆதிக்கம் செலுத்தும் தனித்துவமான பண்டிகை.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

இப்படி ஈழத்துகவி நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடியிருக்கிறார்.

ஈழத்துக்கேயுரிய ‘ஆடிப்பிறப்பு’ தன்னுடைய கடைசிக்காலங்களில் இருக்கின்றது. தொலைக்காட்சிகளின் வருகையுடன் அளவுக்கு மீறியளவில் ஈழத்தமிழர்களிடையே (வட இந்தியர்களின்) தீபாவளி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது.

ஆனால், ஈழத்தமிழர்களுக்கேயுரிய தனித்துவமான பண்டிகையான ஆடிப்பிறப்பு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. நான் நினைக்கிறேன், ஓரிரு வருடங்களாவது ஆடிப்பிறப்பை கொண்டாடிய கடைசி தலைமுறையினர் நாம்தான் என்று.

இன்று ஆடிப்பிறப்பு வடக்கு கிழக்குப் பகுதிகளில் கோவில்களின் பூசைகளுடனும், ஓரிரு வீடுகளின் காய்ச்சப்படும் கூழுடனும் முடிந்து போகிறது. கொழும்பில் பலருக்கு இன்று ஆடிப்பிறப்பு என்றே தெரியாது.

இதுவெல்லாம் எம்முடைய தனித்துவ பாரம்பரியத்தை நாம் இலகுவில் எந்தவித குற்றவுணர்வுமின்றி மறக்கின்றோம் என்பதற்கு நல்லதொரு சான்று. இதையெல்லாம் நினைக்கும் போது ஏதோவொரு வெறுமை மனதில் ஒட்டிக்கொள்கிறது. ஆனாலும், நாளை வேறு பிரச்சினைகள் வரும், அப்போது இதுவும் கடந்து போகும்.