விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த தலைவர்கள், போராளிகள், பொதுமக்களை நினைவு கூறும் “வீரமக்கள் தினம்” நிகழ்வு நேற்று வவுனியா கோவில்குளம் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவகத்தில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுதினமான கடந்த 13ம் திகதி முதல் புளொட் அமைப்பின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுதினமான நேற்று (16.07) வரை வீரமக்கள் தினம் நினைவுகூரப்படுகிறது.
26 வது வருடமாக நடைபெற்ற வீரமக்கள் தின நிகழ்வின் சுடர் ஏற்றும் நிகழ்வு, மலரஞ்சலி, கவி அரங்கு, நடன நிகழ்ச்சி, என்பன இடம்பெற்றதுடன், புளொட் தலைவர், தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை உள்ளடக்கிய விசேட உரையும் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் செயலாளர் திரு எஸ்.சதானந்தம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வை.பாலச்சந்திரன், வட மாகாண உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஈ.பி,ஆர்.எல்.எப் இன் முக்கியஸ்தர் பாபு மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






