வவுனியா சுவர்க்கா மண்டபத்தில் இன்று (18.07.2015) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன் பின்வருமாறு தெரிவித்தார்..
தமிழர் சாம்ராஜ்யத்திற்குப் பின்னர் எமது நாடு எம்மிடம் சுதந்திரமாக வழங்கப்பட்டபோது தமிழர்களுக்கான உரிமைகள் விடயத்தில் உண்மையில் ஒரு அடிமை சாசனத்தின் கீழ் வாழவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே தமிழர்களுக்கான ஒரு சுயநிர்ணய உ ரிமையுடன் எமது தமிழினம் வாழ்வதற்கான உரிமையைக்கோரி பல்வேறு அகிம்சைப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த அகிம்சைப் போராட்டத்தின் முடிவில் வேறு வழியின்றி எமது தமிழினம் ஆயுதப்போராட்டத்தின் மீது தள்ளப்பட்டது.
உண்மையில் எமது தமிழினம் தானாக விரும்பி போராட்டத்ததைக் கையில் எடுக்கவில்லை. பலாத்காரமான முறையில் அது எம்மிடம் தள்ளப்பட்டது. அந்தப்போராட்டம் இன்று முள்ளிவாய்க்காலுடன் மௌனித்த நிலையில் எமது மக்கள் மிகவும் வஞ்சகத்தன்மையுடன் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
காலத்திற்குக் காலம் எமது தமிழ்த் தலைமைகள் சிங்கள பேரினவாத அரசுகளால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளது.
இன்று முள்ளிவாய்க்காலில் நடந்த போராட்டத்தின் பின்னர் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஜ.நா. சபை ஆணையாளர் மற்றும் மகிந்த ராஜபக்ஷ அரசுடன் ஒன்று சேர்ந்து இந்த மக்களுக்கு ஒரு பொய் வாக்குறுதியை வழங்கியது.
13ஆவது திருத்தச்சட்டத்திற்கு மேலாக சென்று தமிழர்களின் பிரச்சினையினை பூரணமாக தீர்த்து வைப்பதாக கூறியது. ஆனால் அது வெறும் வார்த்தைகளாகவே காணப்பட்டது. தமிழர்களின் உரிமைப் போராட்டமானது ஜ.நா. சபை வரை எடுத்துச் செல்லப்பட்டு அதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் நாம் இன்று பாராளுமன்ற தேர்தலைச் சந்திக்கின்றோம்.
நாம் மக்களைத்திரட்டி மீண்டும் ஒரு அகிம்சைப் போராட்டத்தில் நிச்சயமாக இறங்கவேண்டிய ஒரு சூழலில் தள்ளப்பட்டிருக்கின்றோம். கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வெளிப்படையான உரிமை மீறல்கள் நடைபெற்ற போது நாம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை கொண்டு வந்த பின்னர் அந்த வெளிப்படையான உரிமை மீறல்கள் நிறுத்தப்பட்டது. இருந்தும் அமைதியான முறையில் உள்ளக முறையில் வெளிப்படையாக இல்லாமல் அடிமட்டத்தில் அடக்கு முறைகள் மாறவில்லை என்பது தான் எனது கருத்தாகும்.
எமது காணிப் பிரச்சனைகள் எமக்குத் தீர்க்கப்படவில்லை. எமது மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு எந்த விதமான விசாரணைகளுமின்றி தடுத்து வைத்துள்ளனர்.
அரசியல் கைதிகள் விடுவிக்கபட்ட வேண்டும்.
காணமற்போனோர் சம்பந்தமான விடயங்கள் வெளிப்படத்தப்பட வேண்டும். எமது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் எமக்கான விசேட கவனங்கள் செலுத்தப்பட வேண்டும் எனவும்ம ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.
-பிராந்திய செய்தியாளர்-






