இறப்பதற்கு அனுமதிகோரி 5 கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!!

999

Students

மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் இறப்பதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரியமான ”வியாபம்” ஊழல் முறைகேடுகள் சமீபத்தில் அம்பலமாகியது. தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஊழல் குறித்து மாநில சிறப்புக்குழு விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய 49 பேர் இதுவரை மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதையடுத்து ‘வியாபம்’ ஊழல் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

40 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. குழு, கடந்த திங்கட்கிழமை விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் நடந்த மருத்துவ நுழைவு தேர்வு ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட 2,500 பேர்களில், மத்திய பிரதேசம் மாநிலம் காஜ்ரா ராஜா மருத்துவ கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் பெயரும் இடம்பெற்றது.

மாணவர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாங்கள் பி.எம்.டி. தேர்வை (2010ம் ஆண்டு நடந்த மருத்துவ நுழைவு தேர்வு) முடித்துவிடோம். ஆனால் மூன்று வருடங்கள் கழித்து எங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

எங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து, கல்லூரி ஐ.டி. கார்டில் இருந்து வேறுபடுவதாக கூறி எங்களது மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களுக்கு நீதியை கோரியுள்ள அவர்கள், அல்லது நாங்கள் இறப்பதற்கு அனுமதி வழங்குங்கள் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு மாணவர்களிடம் இருந்து எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, எந்தஒரு மாணவர் மீதும் பேதம் காட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.