மன்னாரில் சிங்கள குடியேற்றம் – செல்வம் அடைக்கலநாதன்..!

349

selvamமன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற தமிழ், முஸ்ஸிம் மக்களின் மீள் குடியேற்றத்தை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் உள்ளடங்களாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம் 6 ஆயிரம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சென்று வேறு இடங்களில் அகதிகளாக வாழ்ந்து வரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்ஸிம் குடும்பங்களை உரிய முறையில் அவர்களுடைய சொந்த மண்ணில் குடியேற்றம் செய்ய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றது.

ஆனால் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள பல்வேறு உத்திகளை அரசு கையாண்டு வருகின்றது.

தமது மீள் குடியேற்றங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தமது சொந்த மண்ணில் மீள் குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை முதலில் உரிய முறையில் அரசு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.

இந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படால் சிங்கள குடியேற்றங்களை அரசு மேற்கொண்டால் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்.

எனவே யுத்தத்தினால் பல பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த தமிழ், முஸ்ஸிம் மக்களை அவர்களுடைய சொந்த மண்ணில் உரிய முறையில் குடியேற்றம் செய்ய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.