அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத்தராவிட்டால் அன்று தமிழரசுக் கட்சியிலே இருந்த அஸ்ரப் பெற்றுத்தருவேன் எனக் கூறினார் : ரிசாட் பதியுதீன்!!

559

வவுனியா அண்ணா நகரில் இன்று (11.08.2015) நடைபெற்ற ஜக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார நிகழ்வில் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஒரு தேசிய உணர்வோடு தமிழ் சமூகம் பயணித்தது எனத் தெரிவித்த ரிசாட் பதியுதீன் ஆகக் குறைந்தது சமஸ்டியை தலைவர் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையோடு தமிழ் சமூகம் பயணித்தது எனத் தெரிவித்தார்.

அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத்தராவிட்டால் அன்று தமிழரசுக் கட்சியிலே இருந்த அஸ்ரப் பெற்றுத்தருவேன் எனக் கூறியதாக குறிப்பிட்டார்.

1983 இன் பின்னரான காலப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் மாறி மாறி கொலைகளில் ஈடுபட்டதாக தெரிவித்த அவர் முஸ்லிம் இளைஞர்களும் இயக்கங்களில் இணைந்து செயற்படத் தொடங்கியமையால் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை உருவாக்கியதாக தெரிவித்த அவர் நோக்கம் நிறைவேறாமலேயே இறுதி யுத்தம் முடிவடைந்ததாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட ரிசாட் பதியுதீன், இறுதி யுத்தம் முடிவடைந்து மக்கள் வவுனியா நோக்கி வந்த போது கூட்டமைப்பைச் சேர்ந்த எவரும் வந்து பார்க்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வவுனியா வந்த மக்களுக்கு கூழ் காச்சி வழங்கியதாக குறிப்பிட்ட அமைச்சர் தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற பாடுபட்டதாக தெரிவித்தார்.

இறுதிகட்ட யுத்தம் நடைபெற்றபோது யுத்தத்தை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றஞ்சாட்டினார்.

அகதி வாழ்க்கை என்பது கொடுமையானது என சுட்டிக்காட்டிய அமைச்சர் எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு தலைவராக வளர்ந்து விடுவானோ என்ற பயத்தினாலும், பொறாமையின் காரணமாகவும் சிலர் தன்னை தூற்றுவதாக குறிப்பிட்டார்.

தன்னை பழி வாங்குவதாக நினைத்து சிலர் அப்பாவி மக்களை பழி வாங்குவதாக குற்றஞ்சாட்டினார். தமிழ் மக்களுக்கே அதிகமான வீடுகளைக் கட்டிக்கொடுத்ததாக தெரிவித்த அவர் முஸ்லிம் மக்களுக்கு கட்டிக்கொடுத்த வீடுகளை காட்டி எதிர்க்கட்சிகள் வாக்கு சேகரிப்பதாக தெரிவித்தார்.

27 வது வயதில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இன்று வரை மக்களுக்கு சேவைசெய்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் இனவாதத்தை மதவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்த கையோடு ஓடிவிடுவதாக சுட்டிக்காட்டியதுடன் தமிழ் முஸ்லிம் உறவு பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

IMG_7813 IMG_7838 IMG_7842