மன்னார், வவுனியா ஆசன பங்கீட்டில் குழப்பம்..!

573

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என நேற்று காலை வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதும் கூட்டு கட்சிகளுக்கு ஆசனங்களை பகிர்வது குறித்து இன்னும் இணக்கம் ஏற்படவில்லை.சிக்கலில் இருந்த யாழ். மாவட்டத்தில் போட்டியிட கூட்டுக் கட்சிகளுக்கு ஆசனங்கள் இணக்கப்பாட்டுடன் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 4 ஆசனங்களும், ரெலோவுக்கு 3 ஆசனங்களும், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி, ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டதுடன், கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 33 வேட்பாளர்களை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஆசன பங்கீடு குறித்து இறுதி முடிவு நேற்று எடுக்கப்படவில்லை.

அதற்கு காரணம் தமிழர் விடுதலை கூட்டணி இவ்விரு மாவட்டங்களிலும் அதிக ஆசனங்களை கோரி வருவதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால் நேற்றைய கூட்டம் இறுதி முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.