ஆஷஸ்: இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி..!

403

ashesஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 18–ந் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 361 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா128 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 233 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3–வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு333 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 178ஓட்டங்களுடனும், பேர்ஸ்டோ 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பேர்ஸ்டோ20 ஓட்டங்களுடன் விக்கெட் கீப்பர் ஹேடினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழநதார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் மேற்கொண்டு 2 ஓட்டம் மட்டுமே சேர்த்த நிலையில், ரையான் ஹாரிசின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 180 ஓட்டங்களுடன் (338 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அத்துடன் இங்கிலாந்து அணி தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு583 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாருமே சேசிங் செய்திராத இமாலய இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா 2–வது இன்னிங்சை தொடங்கியது. இந்த முறையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ‘பிடி’யில் சிக்கி அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் சிதறி போனார்கள்.

அவுஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 235 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 347ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது டெஸ்ட் போட்டி வருகின்ற1–ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.