
17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பிற்கு மனச்சாட்சியுள்ள மக்கள் வழங்கிய வாக்குகள் அனைத்தும் தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் மனித மாண்பிற்கும் கிடைத்த வெற்றியாகும்.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆறு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 252 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அள்ளிவீசப்பட்ட ஆசை வார்த்தைகளுக்கும், பொருட்களுக்கும், பணத்திற்கும் விலை போகாது தமிழ் மக்களாகிய நீங்கள் வழங்கிய வாக்குகளால் நான்கு உறுப்பினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நாடாளுமன்றிற்கு செல்லும் வாய்ப்பினை வழங்கியுள்ளீர்கள்.
உங்களின் வாக்குப் பலத்தினால் நாடாளுமன்றிற்கு செல்லும் எம்மவர்களைப் பாராட்டுவதோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவு பெற உறுதியுடன் உழைக்க வேண்டுமென வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் காலங்களில் எம்மோடு ஒன்றிணைந்து சிரமங்கள் எதனையும் பாராது தமது பணிகளையெல்லாம் புறந்தள்ளி அரும்பாடுபட்டு வெற்றிக்காக உழைத்த வன்னித் தேர்தல் மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ் தேசியப் பற்றாளார்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழகங்கள் ஏனைய அமைப்புக்கள் சார்ந்தவர்கள், கட்சியின் பணியாளர்கள், அபிமானிகள், தொண்டர்கள், பொதுமக்கள், கல்விச் சமூகத்தினர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இ.இந்திரராசா
வடமாகாண சபை உறுப்பினர்.





