தாய்லாந்தில் லொறி மீது மோதிய வேகத்தில் 2 அடுக்கு பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாங்காக் நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் ராய் எட் நோக்கி புறப்பட்ட 2 அடுக்கு பஸ் இன்று அதிகாலை மத்திய சரபுரி மாகாண நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
எதிர்முனையில் படுவேகமாக வந்த சீமெந்து லொறி கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்குள் பாய்ந்தது. லாரி மோதிய வேகத்தில் பஸ்சின் எஞ்ஜின் பகுதியில் தீ பிடித்தது. மளமளவென்று பரவிய தீ பஸ் முழுவதும் பரவியது.
அதிகாலை நேரம் என்பதால் அரை தூக்கத்தில் இருந்த பயணிகள், என்ன நடக்கிறது? என்பதை யூகிப்பதற்குள் வேகமாக பரவிய தீயில் சிலர் சிக்கிக் கொண்டனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் பஸ்சினுள் இருந்து 18 பிணங்களை மீட்டனர். பலத்த தீக்காயமடைந்த 20 பயணிகளை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போகும் வழியில் ஒரு பயணி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய பஸ் முழுமையாக எரிந்து அடையாளம் தெரியாதபடி உருக்குலைந்துவிட்டது.