தீவிரமடையும் மலேசிய பிரதமருக்கு எதிரான ஆர்ப்பட்டம்!!

327

702221880malaysiaமலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை பதவி விலக கோரி தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு நிதியில் இருந்து நஜீப் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குகளுக்கு 70 கோடி அமெரிக்க டொலர்கள் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மறுத்தபோதிலும் நாளுக்கு நாள் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில் ரசாக் பதவி விலகவும், நேர்மையாக தேர்தல் நடத்தவும் வலியுறுத்தி ‘பெர்ஸிஹ்’ என்ற அமைப்பு சார்பில் சனிக்கிழமை முதல் 2 நாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையொட்டி தலைநகர் கோலாலம்பூரில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.

கோலாலம்பூரில் உள்ள விடுதலைச் சதுக்கத்தை நோக்கிச் செல்ல போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடுதலைச் சதுக்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மலேசிய அரசு பலப்படுத்தியுள்ளது.

போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால் ராணுவம் தலையிடும் என்றும் நாட்டில் அவசர நிலை அமுல்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த மலேசிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பான ‘டிரான்ஸ்பரன்ஸி இன்டெர்நேஷனல்’ கோரிக்கை விடுத்துள்ளது.