கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!

311

wavesதொடரும் தென் மேல் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருசில தினங்களுக்கு இதே காலநிலை நீடிப்பதுடன், தென் கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதனால் கடல் அலையில் வேகம் அதிகமாகக் காணப்படுவதால் மீனவர்கள் மற்றும் கடல்ரோந்து பணியில் ஈடுபடும் கடற்படையினர் அவதானமாகச் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நேற்று (23) இரவு 8 மணிக்கு வெளியிடப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.

நேற்றைய தினம் மத்திய மாகாணத்திலும் அதிக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக லக்சபான, கென்னியன், காசல்ரீ, மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்ததையடுத்து, அவற்றின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டிருப்பதுடன், மகாவலி மற்றும் களனி ஆற்றை அண்டிய பகுதிகளில் வாழ்வோர் நீர் நிலைகளில் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.